“மக்களுக்கு எதுவுமே செய்யாமல் குறை மட்டும் கூறுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்”- செல்வப்பெருந்தகை

 
“காங்கிரசை வைத்து தகராறு செய்யாதீர்கள்... எங்க வேதனையை புரிந்துகொள்ளாதீர்கள்”- செல்வப்பெருந்தகை

மக்களுக்கு எந்த உழைப்பையும் போடாமல் உழைகின்ற கட்சிகளை குறை கூறுவதை விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்காடு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை ஆதரித்து அமைச்சர் தா.மோ அன்பரசன்  வீதி வீதியாக பரப்புரை வாகனத்தில் சென்று,திமுக ஆட்சியின் சாதனைகள் 2026 தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாங்காடு நகர நிர்வாகிகள், தோழமை மை கட்சிகளின், மாவட்ட பொறுப்பாளர்கள், மாங்காடு நகர மன்ற உறுப்பினர்கள், கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “பொறுத்து இருந்து  பாருங்கள், பெட்டியை திறந்தவுடன் தெரியும் மக்கள் தீர்ப்பு... எதுவுமே மக்களுக்கு செய்யாமல் ஒரு கட்சியை குறை சொல்வது ஏற்புடையதல்ல. 24 மணி நேரமும் தமிழக முதல்வர் உழைத்துக் கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் தலைவர்கள்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உழைக்கின்றனர்.மக்களுடன் சேர்ந்து நல்லது, கெட்டது என அனைத்திலும் பங்கேற்கின்றனர். எஸ்ஐஆர் ,கொரோனா வறட்சி பேரிடர், மக்கள் போராட்டம் உள்ளிட்ட எதிலும் பங்கேற்காமல் உழைப்பையும் போடாமல் உழைக்கின்ற கட்சிகளை குறை சொல்வதை விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும்.. உண்மைக்கு புறம்பாக பொய்யே பேசும் கட்சி பாஜக. ஜல் ஜீவன் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி எங்கே? தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை கொடுத்தீர்களா? கல்விக்கு தரக்கூடிய நிதியை நிலுவை வைத்துள்ளீர்கள்! வரலாறு காணாத மழை ஏற்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்படைந்ததற்கு நிதி கொடுத்தீர்களா?  ஏன் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறீர்கள்.. மும்மொழிக் கொள்கை எங்களுக்கு எதற்கு இரு மொழிக் கொள்கையில் படித்து விண்வெளி வரை செல்கின்றனர். எமது பிள்ளைகள் மும்மொழிக் கொள்கை எதற்கு என கேள்வி எழுப்பினால் நிதியை நிறுத்தி விடுகின்றனர். எங்களுடைய உழைப்பு,வரிப்பணம், ரத்தம் வேர்வை என அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது மோடி அரசு.. எனவே நிபந்தனையற்ற மன்னிப்பை மாண்புமிகு முதல்வரிடம்  பியூஸ் கோயில் கேட்க வேண்டும், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.