“டெல்லி தலைமை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்”- செல்வப்பெருந்தகை
டெல்லி தலைமை அறிக்கைக்காக காத்திருக்கிறோம், அறிக்கை வந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதி செய்வோம் என சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் சென்னை விமான நிலையம் வருகை புரிந்தனர். அவர்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைமற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “விமான நிலையத்தில் நோன்புக்காக காத்திருந்தோம். அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து அறிக்கைக்காக காத்திருக்கிறோம். தலைமையிடம் பேசி உள்ளோம், அவர்கள் எங்களுக்கு தெரிவிப்பார்கள். அதற்கு பிறகு நாங்கள் செல்வோம், எந்த இழுப்பறியும் கிடையாது, சுமூகமாகத்தான் உள்ளது. அகில இந்திய காங்கிரஸில் இருந்து அறிக்கைக்காக காத்திருக்கிறோம், அது வந்தததும் அண்ணா அறிவாலயம் சென்று ஒப்பந்தத்தை இறுதி செய்வோம். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என தெரிவித்தார்.

