டிஜிட்டல் இந்தியா என்று சொல்லும் மோடி அரசு, நாங்கள் கேட்கும் தரவுகளை கொடுக்க மறுப்பது ஏன்?- செல்வப்பெருந்தகை

 
 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

டிஜிட்டல் இந்தியா என்று சொல்லும் மோடி அரசு, நாங்கள் கேட்கும் தரவுகளை கொடுக்க மறுப்பது ஏன்? விபரங்களை காகிதம் மூலமாக கொடுப்பது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

selvaperunthagai

சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைதை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்து "வாக்கு திருடனே, பதவி விலகு" என்ற பிரசாரத்தை முன்னெடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை நடைபெற்ற பேரணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் கே.வி.தங்க பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, “பாஜக அரசு எவ்வாறு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தியது கர்நாடகாவில் எப்படி? நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்கள் ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்டவற்றில் எப்படி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தோலுரித்து காட்டியுள்ளார். அம்பானிக்கும் அதானிக்கும் ஒரு வாக்கு இருக்கிறது என்றால் கிராமத்தில் இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட வாக்கு உள்ளது. நம் வாக்கை நாம் தீர்மானிக்க முடியவில்லை. பாஜகவும், ஆர்எஸ்எஸ் தான் தீர்மானிக்கிறது. பல இடங்களில் இறந்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது. உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லை. இதை ராகுல் காந்தி நிரூபித்த பிறகும், பிரதமர் மோடி மௌனம் காக்கிறார் என்றால் அவர் இந்த குற்றங்களை ஒப்புக் கொள்கிறார் என்று தான் அர்த்தம். ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

Tamil Nadu Mahila Congress to protest against PM for his remarks on  mangalsutra: Selvaperunthagai - The Hindu


நாடு முழுவதும் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் தீப்பந்தம் ஏந்தி நீதி கேட்டு பயணம் மேற்கொண்டோம். தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் ஏன் தேர்தல் ஆணையர்களை மாற்றவில்லை? தேர்தல் ஆணையர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். டிஜிட்டல் இந்தியா என்று சொல்லும் மோடி அரசு, நாங்கள் கேட்கும் தரவுகளை கொடுக்க மறுப்பது ஏன்? விபரங்களை காகிதம் மூலமாக கொடுப்பது ஏன்? ஒன்று டிஜிட்டல் இந்தியா உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தில்லு முல்லு நடப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பல மாநிலங்களிலும் தரவுகளை அழித்து வருகிறார்கள். ஆதாரத்துடன் ராகுல் காந்தி முன் வைத்த அவலங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.