“தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியும்”- செல்வப்பெருந்தகை

இந்துத்துவ கருமேகங்கள் தமிழ்நாட்டை சூழ வந்திருக்கிறது, அதை ஒழிக்க அம்பேத்கர் பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்று இருக்கிறோம். ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை படைக்க வேண்டும். அப்படியான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாஜகவால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்துத்துவ கரு மேகங்கள் தமிழ்நாட்டை சூழ வந்திருக்கிறது, அதை ஒழிக்க அம்பேத்கர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம். தமிழ்நாட்டை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் யாரும் சீர்குலைக்க அனுமதிக்க கூடாது. இன்றும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் புத்தகத்தை ராகுல் காந்தி காண்பிக்கும் போது பாஜகவினர் மிரண்டு போகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனுக்கு வாழ்த்துக்கள். அம்பேத்கர் மிகப்பெரிய தேசிய தலைவர், தந்தை பெரியாரை அம்பேத்கரை புகழ்ந்து பாராட்டி ஏற்றுக்கொண்டார். தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியும். குரல் கொடுக்க வேண்டும் என்பதல்ல, தலித் அல்லாதவர்களும் அவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஏற்றத்தாழ்வு தீண்டாமை இன்னும் இருக்கிறது.இரட்டை வேஷம் போடுவது பாஜக தான்.. பாஜகவின் உண்மையான முகத்தை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்” என தெரிவித்தார்.