செங்கோட்டையன் செல்லாத நோட்டு! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்- செல்லூர் ராஜூ
விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை அச்சம்பத்து பகுதியில் தொகுதி மேம்பாட்டு பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியின் போது... விருதுநகர் இளைஞரணி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்வைத்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு,"முதலமைச்சர் பயத்தின் உச்சிக்கு சென்று விட்டார். விருதுநகர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். தமிழக வரலாற்றில் இப்படி குரூப் தேர்வு இரத்து செய்யப்பட்ட வரலாறே கிடையாது. அந்த வரலாற்றையே மாற்றி எழுதி விட்டார் முதலமைச்சர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்னும் அரசியல் பண்பு தெரியவில்லை. கலைஞரின் பண்பை உதயநிதி கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்
அதிமுக தொடர்பாக தவெக-வின் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோரது விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, "ஆதவ் அர்ஜுனா தூய்மையின் பிறப்பிடம். நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அது. அவர் பேச வேண்டியது தான். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது. ஆதவின் பேச்சை விஜயின் ரசிகர்கள் ரசிக்கலாம், மக்கள் ரசிக்க மாட்டார்கள். எங்கள் இயக்கத்தை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் எனக்கூறும் தவெக நேற்று தேர்வு ரத்தானதற்கு போராட்டம் நடத்தியிருக்க வேண்டாமா? செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அவர் ஆயிரம் பேசுவார். விஜயை எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்க போகிறார் செங்கோட்டையன். கல்லூரிக்கு வேண்டுமானாலும் முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்., என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே மட்டும் தான் போட்டி" என்றார்.


