“நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, எய்ம்ஸ் கட்டுமான பணிகளில் மெளனம் காட்டும் திமுக அரசு”

 
sellur raju

மதுரை மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மதுரை TM கோர்ட் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “இன்றைக்கு திமுக அரசையும், மாநகராட்சியையும் கண்டித்து மதுரை மக்கள் இந்த கண்டன கூட்டத்தில் தானாக சேர்ந்த கூட்டம், மக்கள் பங்கெடுப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமம் பட்டு வருவதை சரி செய்யாமல் 112 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம் கட்ட அரசாணை வெளியிட்டுள்ளனர்.

Woman Leader Would Lead AIADMK In Future: Tamil Nadu Minister Sellur K Raju

முல்லை பெரியாறு கூட்டுகுடிநீர் திட்டம், வைகை ஆற்று கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு 2500 ரூபாய் கொடுத்த போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி 5000 ரூபாய் கொடுக்க சொன்னவர்கள், தற்போது கொரோனா மூன்றாம் அலையே வந்து விட்டது, தற்போது ஒரு ரூபாயும் வழங்கவில்லை. பொங்கல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக்கடன் ரத்து என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்து, 13 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து பொதுமக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். தமிழக நிதி அமைச்சர் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்று உள்ளது என்று பேசுகிறார், ஊழல் நடைபெற்று இருந்தால் தற்போது எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாமே..?

மதுரை மக்கள் ரோசக்காரங்க என்பதை இரட்டை வேடம் போடும் திமுக அரசுக்கு நிரூபிக்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற செய்ய வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை இன்றைய அரசு வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வு, 7 பேர் விடுதலை, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஆகியவற்றில் திமுக அரசு எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. எங்கள் ஆட்சியில் இருந்த நிலையைப் போலவே தற்போதும் உள்ளது. அதற்கான பணியை விட்டுவிட்டு பிரதமரை வரவேற்க கூட்டம் நடத்துகின்றனர். மதுரை மக்கள் வாக்களித்துதானே நீங்கள் மதுரையில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றீர்கள். ஆனால் மாற்றான் தாய் மணபாங்குடன் மதுரையை பார்த்து வருகிறது திமுக அரசு. எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை” எனக் கூறினார்.