“சீமான் அரசியல் நாடகமாடுகிறார்”- சேகர்பாபு விமர்சனம்

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள விக்டோரியா அரங்கை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புனரமைப்பு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “விழுப்புரம் மேல்பாதி ரௌபதி அம்மன் கோயிலில் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆலய போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறுகிறார். திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருக்கோயிலில் தினசரி பூஜை நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் திருக்கோயில் திறக்கப்படவுள்ளது. கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால் தான் விழுந்தது என்று கூறுவார்கள்.
இந்த ஆட்சி ஒரு செயலை முன்னெடுத்து அதை செய்வதற்கு காலம் கனிந்து வருகின்ற பொழுது அதற்கு ஒரு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகம் செய்கிறார்கள். இது போன்ற அறிவிப்புகளை கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வெகுவிரைவில் திரௌபதி அம்மன் திருக்கோயில் மக்கள் தரிசனத்திற்கு ஒப்படைக்கப்படும்” என்றார்.