புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா என தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை வருகின்ற நாளை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சரியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் கடலூரின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த இருசக்கர வாகனம், கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மறித்து போலிசார் சோதனை செய்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் சிலர் குடிப்பதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஒன்றிரண்டு மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்தனர். அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை கீழே கொட்டி அழித்தனர்.


