"திமுகவினர் பணம் கொடுக்குறாங்க... என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்குறாங்க"- சீதாலட்சுமி

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..
காய்கறி சந்தைக்கு நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்க அவர் வந்தபோது பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அதனை மீறி பிரச்சாரம் செய்வதாகவும், வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காய்கறி சந்தை வியாபாரிகளை சந்தித்து ஆதரவு கோரிய அவர் காலை தொட்டு வணங்கி தனக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். மேலும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீதாலட்சுமி, தன்னை தேர்தலில் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க திமுக சதி செய்வதாக குற்றம் சாட்டினார். வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அதனை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
இதே போல், நேற்று ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சீதாலட்சுமி மற்றும் நிர்வாகிகள் மீது கருங்கல்பாளையம் மற்றும் ஈரோடு நகர காவல் நிலையங்களில் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.