"பெண்கள் முழுமையான அரசியல் அதிகார உரிமையினைப் பெற்றிட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்" - சீமான்

 
Seeman

பெண்கள் முழுமையான அரசியல் அதிகார உரிமையினைப் பெற்றிட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிக விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித்தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணியப் பாரதி. ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என்று பெண்ணிய விடுதலைக்காகச் சங்கநாதம் எழுப்புகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். ‘அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும்’ என அறச்சீற்றம் கொள்கிறார் ஐயா பெரியார். ‘பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!’ என்று பாலினச் சமத்துவத்தைப் பாக்களின் வழியே போதிக்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார். ‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் இவ்வுலகுக்குப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். இவ்வாறு பெண்களைப் போற்றிக்கொண்டாடுவதே தமிழர்களின் அறம் வகுத்துத் தந்த உயர்நெறியென அதனை அடியொற்றித் தழுவினார்கள் நமது முன்னவர்களும், மூத்தோர்களும்.

tn

அத்தகைய பெருமைக்குரிய பெண்கள் தங்களுக்கான சம உரிமை, இட ஒதுக்கீடு கேட்டு  போராடிக்கொண்டிருக்கும் காலத்தில்,  அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகும் வகையில் நாள்தோறும் நடந்தேறும் பாலியல் வன்முறைகள் பெருங்கவலையைத் தருகின்றன. அதிலும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியாவது சகிக்கவே முடியாத ஒட்டுமொத்த சமூகத்திற்கான தலைகுனிவாகும்.

பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே நம் நாட்டில் பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழப்பெருநிலத்தில் முழுமையாக சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். 

seeman

பெண்கள் அனைத்து உரிமைகளும் பெற்று முழுமையான விடுதலையை அடைந்திட, முதலில் பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும். அதற்கு கல்வி முறை, திரைப்படங்கள், ஊடகங்கள், அதிகார அடுக்குகள் என யாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். 

எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்களை அதிகாரப்படுத்துவதே அவர்களுக்கு எதிராக நடக்கும் சமூக குற்றங்களைக் களையவும், அவர்கள் மீதான அடிமைத்தளையை உடைக்கவும் இருக்கும் முதன்மை வாய்ப்பென்பதை உணர்ந்து, பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து சமரசமின்றி போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்களைப் போற்றிடும் இத்திருநாளில் உலக மகளிர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!

பெண்மையைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.