3 நாட்கள் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்ய முடியும் என்பது ஏற்புடையதல்ல - சீமான்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்வதற்கான கால அளவினை கூடுதலாக மேலும் 3 வேலை நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியி்ன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இரண்டாம் முறையாக நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகின்ற 10.01.2025 முதல் 17.01.2025 வரை 8 நாட்கள் வரை நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள போதிலும் பொங்கல் விடுமுறை காரணமாக அவற்றில் மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்ய முடியும் என்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலை தமிழர்களின் முதன்மையான பண்பாட்டுத்திருவிழாவான பொங்கல் விழா முடிந்த பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கலாம். அல்லது வேட்புமனுத்தாக்கலையாவது பொங்கல் விழா முடிந்த பிறகு தொடங்கியிருக்கலாம்.
அதைவிடுத்து, பொங்கல் விடுமுறை நாட்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு 8 நாட்கள் வரை வேட்புமனுதாக்கலுக்கான நாட்கள் என்று அறிவித்துவிட்டு, அவற்றில் மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்ய முடியும் என்பது சனநாயக விரோதமானது. சிறிதும் நியாயமற்றது, 8 நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாட்கள் என்று அறிவிக்க முடிந்த தேர்தல் ஆணையத்தால் 8 நாட்களும் வேட்புமனுவை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாமல் போனது ஏன்? ஆகவே, இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்வதற்கான கால அளவினைக் கூடுதலாக மேலும் 3 வேலை நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.