புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு!

 
seeman

உலகளாவிய புலிகள் நாளையொட்டி புலிகளைக் காக்க வேண்டியது பேரவசியமாகிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று உலகளாவிய புலிகள் நாள். பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக்கொண்டு இருக்கின்றன.

tiger

ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப்பெறுவதாகப் பொருள்கொள்ளப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையில் நிகழ்ந்தேறும் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச்சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப்பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது.

Seeman

புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் அற்றுப்போய் அவை அழிவதன் மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். இதனால், புலிகளைக் காக்க வேண்டியது பேரவசியமாகிறது. ஆகவே, பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும், சூழலியல் சமநிலைக்கும் பெரும்பங்காற்றும் புலிகளைக் காக்க அதிகப் புலிகளைப் பாதுகாக்கும் வனங்களை உருவாக்கி, அவைகள் வாழும் வனப்பரப்புகள் சுருக்கப்படுவதைத் தடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.