நாட்றம்பள்ளி விபத்து- உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்குக: சீமான்

 
seeman

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சுற்றுலா வாகனம் மீது பாரவுந்து மோதி கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உரிய துயர் துடைப்பு உதவிகள் வழங்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, செப்டம்பர் 11 அன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணம் செய்த வாகனம் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி சாலையோரம் நின்றிருந்தபோது, அதே சாலையில் வேகமாக வந்த பாரவுந்து, சுற்றுலா வாகனம் மீது பயங்கரமாக மோதி நிகழ்ந்த விபத்தில், ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த மீரா, தெய்வானை, சேட்டுயம்மாள், தேவகி, சாவித்திரி, கலாவதி, கீதாஞ்சலி ஆகிய ஏழு பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் 14 பேர் படுகாயம் அடைந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Image

தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், உயர் மருத்துவமும் அளித்திட உடனடியாக உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.