போலீசார் தாக்கியதில் ஓட்டுநர் பலி! கொலையை மூடி மறைக்க முயற்சி- சீமான்

 
Seeman

தானி ஓட்டுநர் தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

விடிய விடிய ஓய்வெடுக்க விடாமல்.., முதல் நாளே வதைப்பதா?? - சீமான் கண்டனம்..

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த தானி ஓட்டுநர் தம்பி பாதகுமாரை உச்சிபுளி காவல்நிலையத்தில் பணியாற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. 

கண்முன்னே காவல்துறையினர் நடத்திய தாக்குதலே தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணம் என அவருடன் இருந்த நண்பர் அஜீத்குமார் கூறியுள்ள நிலையில், அது குறித்து விசாரிக்க அவரது உறவினர்கள் வலியுறுத்தியும் தமிழ்நாடு காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, கொலையை மூடி மறைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. அதுமட்டுமின்றி, தம்பி பாதகுமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் தம்பி கண்.இளங்கோவன் உள்ளிட்ட உறவுகளை திமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளதும் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.  

குரூப் - 4 மூலம் ஆண்டுதோறும் 30,000 பணியிடங்களை நிரப்புக -  சீமான் கோரிக்கை.. இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 3 ஆண்டுகளில், காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது  கொடுங்கோன்மையாகும். சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது. தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் மட்டுமே என்பதை தம்பி பாதகுமாரின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு தம்பி பாதகுமாரின் மர்ம மரணம் குறித்து குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதோடு, தம்பி பாதகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.