“பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது கொடுங்கோன்மை”- சீமான்
விளைநிலங்களை அழித்தொழிக்கும் ஓ.என்.ஜி.சி.(ONGC) நிறுவனத்திற்கு எதிராகப் போராடியதற்காக ஐயா பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது கொடுங்கோன்மை என நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் கிராமத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் கழகத்திற்கு (Oil and Natural Gas Corporation) நிறுவனத்திற்கு எதிராகப் போராடியதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. விளைநிலங்களைக் காக்க விவசாயிகளை ஓரணியில் திரட்டி தொடர்ந்து போராடும் ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களின் மீது உள்நோக்கத்துடன் பொய் வழக்கு தொடுத்துச் சிறை தண்டனை பெற்றுத்தந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆளும் அரசுகள் இழைக்கும் அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போராடுவது அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். போராடுவதற்கு அனுமதி மறுப்பதும், வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவதும் இந்த நாட்டின் அரசமைப்புக்கு எதிரானதாகும். தங்கள் வாழ்வாதாரமான வேளாண் விளைநிலங்களைக் காக்க விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பது இது மக்களாட்சி நாடுதானா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரிப்படுகையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மீத்தேன், ஈத்தேன், எரிகாற்று எடுத்து விளைநிலங்களைச் சீரழிக்கத் தடைவிதித்த நிலையில், அதற்கு முன்பே, கடந்த 2015ஆம் ஆண்டே காவிரிப்படுகையைப் பாதுகாக்க ஐயா பி.ஆர்.பாண்டியன் முன்னெடுத்த போராட்டம் எப்படித் தவறானதாகும்? அரசு செய்தால் அது சட்டம்? அதையே சாமானிய குடிமகன் செய்தால் குற்றமா? கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாதது போல் திமுக அரசு அமைந்த பிறகும், அரசின் நிலைப்பாடு மாறவில்லை என்பதாலேயே இத்தனை கடுமையான தண்டனையைக் கீழமை நீதிமன்றம் விதித்துள்ளது. விளைநிலங்களைக் காக்கப் போராடிய ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த திமுக அரசிடம் எப்படி கருணையை எதிர்ப்பாக்க முடியும்?

ஓ.என்.ஜி.சி குழாய்களைச் சேதப்படுத்தியதாகச் சொல்லப்படும் குற்றத்திற்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை என்றால், எங்கள் முன்னோர்கள் அரும்பாடுபட்டுக் காட்டைக் கழனியாக்கி செதுக்கி சீர்படுத்தி, தலைமுறை தலைமுறையாகத் தாய்போல உணவளித்த உயிரினும் மேலான எங்கள் விளை நிலங்களை மீளவும் உருவாக்க முடியாத அளவிற்கு மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று அழித்தொழிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அரசப் பெருநிறுவனத்தின் உடைமை என்றால் ஒரு நீதி, அப்பாவி ஏழை விவசாயிகளின் உடைமை என்றால் வேறு நீதி என்றால் அதற்குப் பெயர் நீதியல்ல மாபெரும் அநீதி! விளைநிலங்களைக் காக்கப் போராடியது கொடுங்குற்றம் என்றால் அதற்கான தண்டனையை உடனடியாகத் தர வேண்டியதுதானே? இத்தனை ஆண்டுகாலத் தாமதம் ஏன்? பத்தாண்டு காலம் இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதிக்கு ஒப்பானது இல்லையா? இத்தனை ஆண்டுகாலம் ஐயா பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, வழக்கு தொடர்பான அலைச்சல், அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்பட்ட மன உளைச்சல் அதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்குவது எப்படிச் சரியான நீதியாக இருக்க முடியும்? அதிலும் தங்கள் சொந்த நிலங்களைக் காக்கப் போராடியது குற்றமே அல்ல எனும்போது அதற்கு இரட்டைத் தண்டனை என்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு விளைநிலங்களைக் காக்கப் போராடியதற்காகச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐயா பி.ஆர்.பாண்டியனை வழக்கிலிருந்து விடுவிக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


