பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல்- சீமான் கண்டனம்
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

