ஆடு, மாடுகள் ஓட்டுரிமை கேட்பதாக சீமான் பேச்சு
மதுரை விரகாலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆடு, மாடுகளுக்கான மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “உங்களால் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை, எங்களுக்கு ஓட்டுரிமை கொடுங்கள். நாங்களாவது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கிறோம். இதுதான் ஆடு, மாடுகளின் கோரிக்கை. ஆகஸ்ட் 3 ஆம் தேதி தேனியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நானே நேராக சென்று ஆடு, மாடுகளை மேய்க்க உள்ளேன். வனக்காவலர் தடுத்தாலும், வழக்கு போட்டாலும் விட மாட்டேன்.
மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்கம் கேரளா, அங்கு கட்டுமானங்களுக்கு தேவைப்படும் மண், கற்கள் கன்னியாகுமரியில் இருந்து செல்கிறது; நம்முடைய மலையை அறுத்துக் கொண்டு செல்கிறார்கள்; அதற்கு பதிலாக மருத்துவ கழிவுகளை இங்கு கொட்டுகிறார்கள்; அவர்கள் மலை அங்கு பாதுகாப்பாக உள்ளது; இதற்கு அனுமதி கொடுத்தது யார்? பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கும் போது பாதிக்கப்படாத வனவிலங்குகள், நாங்கள் அடிப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ப்பதால் பாதிக்கப்படும் என்பது யார் ஏற்பது? ஆடு, மாடுகளிடமிருந்து மேய்ச்சல் நிலங்களை திருடுவதை எப்படி சொல்வது? நாடு உங்களுடையது என்றால் காடு எங்களுடையது இல்லையா? இந்தியாவில் 2021 முதல் 22ம் ஆண்டு வரை மாட்டுக்கறி ஏற்றுமதி ரூ.24 ஆயிரம் கோடி; பாலின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளபோது நீங்கள் ரூ.50,000 கோடிக்கு சாராயம் விற்று, அதை குடிக்க வைத்து பல தாய்மார்களின் தாலியை அறுத்து வருகிறீர்கள்; கால்நடை துறையின் வேலை என்ன? கால்நடைகளை பற்றி கவலைப்படாத துறைக்கு கால்நடை துறை என பெயர்!” என்றார்.


