“திமுகவிடம் ஒரு எம்பி சீட்டு, தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு? தனியாக நின்றால் டெபாசிட் கூட பெற முடியாது”- காங்கிரஸை வெளுத்த சீமான்
திமுகவிடம் ஒரு எம்பி சீட்டு, தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “காங்கிரஸ் பெருமக்களிடம் நான் கேட்பது, ‘நீங்கள் எல்லாம் சோத்துல உப்புப் போட்டுதான் சாப்பிடுறீங்களா?' உங்களுக்கு மானம், ரோசம், சூடு, சொரணை, வெட்கம் இதுல எதாவது ஒன்னு இருக்கா? ஆனால், எல்லாரும் கசங்காத வேட்டி சட்டை மட்டும் வெட்கம் இல்லாமல் கட்டிக்குறீங்க. இப்போதுதான் திமுககாரனுக்கு அறிவு வருது. 10 எம்.பி.க்கள் திமுக போட்ட பிச்சையில் வைத்துள்ளார்கள். நீங்கள் உண்மையில் மானஸ்தன் என்றால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்யுங்கள். பின்னர் த.வெ.கவுடன் இடைத்தேர்தலை சந்தியுங்கள். அதில் வென்று வாருங்கள். திமுகவிடம் ஒரு எம்பி சீட்டு, தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு? மேலும் மாணிக்கம்தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்து, தவெக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? தனியாக நின்றால் டெபாசிட் கூட பெற முடியாது.
மன்னராட்சி, வாரிசு அரசியல் என்று பேசிய முதல்வர் விஜய் இன்று மன்னர் ஆட்சியின் தோற்றுவாயான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன்? நாம் நிறைய தோற்று போயிருக்கிறோம். உலக வரலாற்றில் இவ்வளவு தோல்விகளை சந்தித்த இயக்கம் வேறு இல்லை, இருக்கபோவதும் இல்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் தளராமல் நிற்போம், எதற்காக நாங்கள் வெல்ல கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதற்காகவே நாங்கள் வென்றே தீருவோம், எங்களது வெற்றி சற்று தள்ளிப் போகலாம், ஆனால் நிச்சயம் வந்தே தீரும். முதலமைச்சர் கரூர் சம்பவத்திற்கு என் மீது பழியை போடுகிறார்கள் என்று பேசுகிறார். நீங்கள் கரூருக்கு வரவில்லை என்றால் கூட்டம் இல்லை, கூட்டம் வரவில்லையென்றால் நெரிசல் இல்லை. நெரிசல் இல்லையென்றால் மரணம் இல்லை. இதில் மூலக்காரணம் நீங்கள்தான். அந்தக் குற்ற உணர்வோடு இந்த சம்பவத்திற்கு நானும் ஒரு காரணம் அதனால் வருந்துகிறேன் என்ரு இதுவரை நீங்கள் ஒரு வார்த்தை கூட பதிவு செய்யவில்லை CM SIR...என்றார்.

