நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாளை ஆஜராக முடியாது - சீமான் தரப்பு விளக்கம்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாளை ஆஜராக முடியாது என சீமான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார். இதனிடையே நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் .
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாளை ஆஜராக முடியாது என சீமான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மனில் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாளை கலந்தாய்வு கூட்டம் இருப்பதால் ஆஜராக முடியாது என சீமான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் வேறு தேதியில் ஆஜராவதாக சீமான் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.