“ஓமந்தூரார் மருத்துவமனையை புதிய தலைமைச் செயலகமாக பயன்படுத்தலாம்” - சீமான்
ஓமந்தூரார் மருத்துவமனையை புதிய தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தற்போதைய தலைமைச் செயலகத்துக்கு என்ன பிரச்னை? சென்னையில் எங்கு தலைமைச் செயலகம் கட்டினாலும் நெரிசல் ஏற்படும். நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட நினைத்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.600 கோடியில் கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தையே பயன்படுத்தி கொள்ளலாம். மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றலாம். மக்களின் பணத்தை வீணடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு, நான் 1,200 கோடி ரூபாயில் கட்டுவேன் என்பதுதான் மாற்றா? 1,000 ரூபாய் திமுக கொடுக்கிறது என்றால், நான் 2,500 ரூபாய் கொடுக்கிறேன் என சொல்வதுதான் மாற்றா? 3 சிலிண்டர்கள் தருவேன் என இபிஎஸ் சொன்னார். நான் 6 சிலிண்டர் தருவேன் என சொல்வதுதான் மாற்றா?
இரட்டை இலையில் நின்று, வென்று சரியாக 12-வது நாள் பதவி விலகக் காரணம் என்ன? இடைத்தேர்தல் உங்கள் கட்சி ஆட்சியால் திணிக்கப்பட்டதா..? இல்லையா..? பதவிக்காக அங்கேயும், இங்கேயும் ஓடுபவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். இது மக்கள் விரும்பி ஏற்ற அரசு, நாம் கருத்து சொல்ல முடியாது. இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என முன்பே அறிவித்திருந்தால் இடதுசாரிகளுக்கு ஆதரவு அளித்திருப்போம்” என்றார்.

