“எதையாவது கொடுத்து மக்களை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள்”- சீமான்

 
சீமான்

வேலோடு வாடா முப்பாட்டன் முருகா, அநீதிக்கு எதிரான அறப்போரை தொடங்குவோம் என்ற பாடலை பாடி திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திறந்த வேனில் நின்றபடி விவசாயி சின்னத்திற்கு வாக்குக்கேட்டு பேசிய சீமான், “சாராயம் என்ற திரவப் போதை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற திடப் போதை புழக்கம் அதிகரித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியுமா? என்ற அளவுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எதையாவது கொடுத்து மக்களை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள். வாக்கிற்கு காசு கொடுக்கும் இடத்தில் சேவை என்ற சொல் செத்து விடுகிறது. எங்கள் பயணம் மிக நீண்ட தூரம் கொண்டது.. அன்னை தாய் நிலத்தில் நமக்கென்று ஒரு அரசியல் இல்லை.. நமக்கென்று ஒரு அதிகாரம் இல்லை. வியர்வை சிந்தி விளைய வைத்தவன்.. கண்ணீர் சிந்தி கதறிக்கொண்டிருக்கிறான். பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகும். ஆனால் இந்த நாட்டில் முதலாளிகளுக்கான அதிகாரம் தான் கட்டமைக்கப்படும். இந்த தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிடும் என் அன்பு தம்பி சந்திரன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். 

இந்தியாவை யார் ஆள்வது என்ற தேர்தலிலே எங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றிய எம் மக்கள். தமிழ்நாட்டை யார் ஆள்வது என்ற தேர்தலில் தன் சொந்த பிள்ளைகளை கைவிட மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் இந்த தேர்தல் காலத்தில் நிற்கிறோம். திமுகவிற்கு 2026 ஆம் ஆண்டு மட்டும்தான் மே மாதம் வருகிறது போல 5000 ரூ கொடுக்கிறார்கள். சொத்து வரி , பத்திரப்பதிவு வரி , மின்கட்டண உயர்வு என அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி உங்களுக்கு 1000 , 2000 என தருகிறார்கள். 10.5 லட்சம் கோடி கடனை பெற்று அரசு நிறைவேற்றிய நலத்திட்டம் ஒன்றை காட்டுங்கள்” என்றார்.