“நான் இருக்கும் வரை பா.ஜ.க. வளராது, வெல்லாது”- சீமான்

 
சீமான் சீமான்

திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Image

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுப்பதால் ஆண்டுக்கு 12,000 கோடி செலவாகிறது.. அந்த பணத்தில் வேலை வாய்ப்பை பெருக்கினால் இளைஞர்களே அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பார்களே..? நான் இருக்கும் வரை பா.ஜ.க. வளராது.. வெல்லாது..! அந்த கட்சியோடு அ.தி.மு.க. நேரடியாக கூட்டு வைத்துள்ளது.. தி.மு.க. மறைமுகமாக வைத்துள்ளது அவ்வளவு தான்.

தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போயுள்ளன.அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம் பெறாது. திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம். தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது; பொறுத்திருந்து பாருங்கள்! தமிழ்நாட்டில் பெரிய கூட்டணி என்னுடையதுதான். 

தெருவுக்குத் தெரு சாராயக்கடையை திறந்து நாட்டையே போதையின் கூடாரமாக மாற்றி விட்டு கொலை, கொள்ளைகள் நடக்காமல் எப்படி ? இங்கு மனிதனின் சிறுநீரகம் மட்டுமா திருடப்படுகிறது. பூமித் தாயின் அனைத்து உறுப்புகளையும் அறுத்து எடுத்துச் செல்கிறார்களே ? எப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக் கீழ் வாழ்கிறோம் நாம். தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் தேவை எதற்கு ? இல்லாத பாஜகவை காட்டி வாக்கு வாங்குவது. ஆளும் அதிகாரத்தில் இருக்கும் கட்சி தைரியமாக நாங்கள் இருக்கும் பாஜகவை தமிழ்நாட்டில் நுழைய விடமாட்டோம் அந்த அளவுக்கு நல்ல ஆட்சி செய்வோம் என சொல்ல வேண்டும் . தைரியம் இருக்கிறதா திமுகவிற்கு?” எனக் கேள்வி எழுப்பினார்.