எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்காது- சீமான்

வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “அதிமுக தலைவர்கள்தான் அவர்களின் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியவர்கள். எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்காது. அதிமுகவும், திமுகவும் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இரு கட்சிகளையும் அடித்து துவைப்பதுதான் தங்களது வேலை. ஒரே ஒரு கட்சியுடன் மட்டும் தான் நான் கூட்டணி வைப்பேன்... அது எந்த கட்சி தெரியுமா? ட்ரம்ப் கட்சிதான். மகாராஷ்டிராவில் சிவசேனா என்ற கட்சி எப்படி காணாமல் போனதோ, தமிழகத்திலும் பல கட்சிகள் காணாமல் போகும். நம் மீதுள்ள வெறுப்பில் சீமானுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என நினைத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
வக்பு சொத்துக்களை விற்கவோ வாங்கவோ கூடாது, அது இறைவனுக்கே சொந்தம். இந்து மதத்தினரை வக்பு வாரியத்தின் உறுப்பினராக சேர்ப்பது பேராபத்து. இந்து சமய அறநிலைத்துறை சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? அவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுமா? குறிப்பிட்ட மதத்தை தழுவியதால் அவரை குறிவைப்பது சரியானது அல்ல, இஸ்லாமிய நாடுகள் இந்து கோயில்கள், வழிபாடுகளை அனுமதிக்கிறது. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. இந்து மக்களின் மனதை மகிழ்விக்கவே இந்த திட்டம். இதனால், இஸ்லாமிய மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனட தெரிந்தும் செயல்படுத்துகிறார்கள். இது பேராபத்தை ஏற்படுத்தும்” என்றார்.