“அவங்க மட்டும் தான் பொண்ணா? அவங்க பாலியல் தொழிலாளி”- விஜயலட்சுமி குறித்து சீமான் சர்ச்சை பேச்சு

அவங்க மட்டும் தான் பொண்ணா? அவங்க பாலியல் தொழிலாளி.. ஆதாரத்தை காட்டவா?.. என மீண்டும் நடிகை விஜயலட்சுமி குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சீமானின் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “என்னை பாலியல் குற்றவாளி என எப்படி சொல்லலாம்? 15 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள். அவள் பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரங்களை காட்டவா? அவளுக்குதான் காயப்படும்? அவளுக்குதான் நீதியா? எங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? என்னை பெற்ற தாய், உடன் பிறந்த அக்கா, தங்கை இல்லையா? மனைவி இல்லையா? தினமும் என்னை அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். என்னை பேச என்ன தகுதி இருக்கு? வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது என்னை பாலியல் குற்றவாளி என எப்படி சொல்லலாம்? விசாரணை முடிவிலேயே தெரியவரும். என்னை பார்த்து நடுங்குறீர்கள்” என்றார்.