"இது பெரியார் மண்ணா? எங்களுக்கு பெரியாரே ஒரு மண்ணுதான்"- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் மண் அல்ல, பெரியாரே ஒரு மண்ணுதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண்... இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் மண் அல்ல, பெரியாரே ஒரு மண்ணுதான். வருகிறவர், போகிறவர்கள் எல்லாம் பெரியார் மண், பெரியார் மண் என்று கூறினால் கொலை வெறிவந்து விடும் எனக்கு. பெரியாரைப் பற்றி பேசுவதால் அனைவரும் என்னை எதிர்க்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? எங்கு மாறுபாடு உள்ளது? கொடியில் தான் வித்தியாசம் உள்ளது. பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை ஏற்றீர்கள் என்றால் ஏன் பார்ப்பனிய பெண்ணை தலைமையாக ஏற்றீர்கள். அவரின் அமைச்சரவையில் ஏன் இருந்தீர்கள்..? அதற்கு பதில் இருக்கிறதா? பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கிறீர்களா? பெரியாரின் தாலி அருப்பை ஏற்கிறீர்களா? தற்போது வாயை தான் நான் திறந்து உள்ளேன். இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை, ஒவ்வொன்றாக இது போல் பேசுவேன்... நீங்கள் பதில் சொல்லிக்கொண்டே வாருங்கள். அனைவரது புத்தகமும் அரசுடமையாக்கும்போது பெரியாரின் புத்தகம் மட்டும் ஓரிடத்தில் மட்டுமே உள்ளது, ஏன் அரசுடைமையாக்கவில்லை?. அது அறிவுசார் சொத்து எங்களுக்கே வேண்டும் என்று வீட்டுக்குள் பூட்டி வைத்து இருப்பது யார்? தற்போது தோண்டும் போது ஒவ்வொன்றாக வருகிறது. மொத்தத்தில் அனைத்தையும் வெளியிட்டார்கள் என்றால் அனைவரும் படித்துவிட்டு உண்மையில் அவர் பெரியார் என்றால் தலை வணங்கி ஏற்று கொண்டு போய் விடுகின்றோம்.
பெரியார்தான் முதன்முதலில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தினார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி பேசுகிறார். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான். எல்லாரையும் படிக்க வைத்த பெரியார், உங்களைப் படிக்க வைக்காமல் விட்டுவிட்டார்... very sorry..” என்றார்.