“பெரியாரை எதிர்ப்பதுதான் எனது கொள்கை... வீட்டுக்கு வருவோர்களுக்கு டீ கொடுக்க சொல்லியிருக்கிறேன்”- சீமான்
என் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் போது, எறிகின்ற செருப்பு ஏழு அல்லது எட்டு சைஸ் இருக்க வேண்டும், முட்டை என்பது நாட்டுக்கோழி முட்டையாக இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடம் என பேசுபவனை ஒழிப்பதுதான் சீமானின் கொள்கை. பெரியாரை எதிர்ப்பது தான் எனது கொள்கை. ஐபிஎஸ் கேடரில் உள்ளவர்கள் பேசவே கூடாது. அவர் என்னோடு தர்க்கம் செய்ய தயாரா? இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கும் செயல் தொடர்கிறது. குஜராத்தில் மீனவர்களை கைது செய்யும்போது தமிழக ராணுவத்தினர் விரட்டிச்சென்று மீட்டுள்ளனர். தமிழகம், புதுவை மீனவர்களை தொடர்ந்து சிறை பிடிக்கின்றனர். இதற்கு தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி. தமிழ்நாட்டுக்கு அதிகாரம் வந்த பின் இதே கேள்வியை என்னிடம் கேளுங்கள். நான் அதிகாரத்துக்கு வந்தால் என் மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம்.
சென்னையில் என் வீட்டை முற்றுகையிட்டுள்ளார். அவர்கள் வந்தால் டீ கொடும்மா என மனைவியிடம் கூறினேன். வெயில் நேரத்தில் வருவார்கள், அவர்களுக்கு மோர் கொடுக்கிறேன் என மனைவி கூறியுள்ளார். எங்களுக்கு இது புதிதல்ல. எங்களுக்கு ஒரு கோரிக்கைதான். எறியும் செருப்பு 7, 8 அளவில் கொஞ்சம் புதிதாக இருக்கட்டும், முட்டையை நாட்டு கோழி முட்டையாக வீசுங்கள், அதுவும் உடைந்துவிடும், ஆம்லெட்டாக வீசுங்கள். வெங்காயம், மிளகாய், மிளகு கொஞ்சம் தூக்கலாக இருக்கட்டும். திராவிடம் என்ற சொல் இருப்பதினால் தமிழ்தாய் வாழ்த்தை எதிர்க்கிறேன். திராவிடம் என்ற சொல் நிற்கும் வரை போராட்டம் தொடரும். என் கொள்கைக்கு எதிராக யார் இருந்தாலும் எதிரி தான். வீட்டில் பெரியார் படம் இருக்கட்டும். வந்த வழியை மகனுக்கு காட்ட படம் இருக்கட்டும்” என்றார்.