“இறைதூதரே திமுகவுக்கு ஓட்டு போடாதீங்னு சொன்னாக்கூட முஸ்லீம் கேட்க மாட்டாங்க”- சீமான்
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சி காரணமாகவே நீங்கள் ஆயிரம் இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வுகளை நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி. அவரை இதில் இழுத்து விடாதீர்கள். ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள். திமுகதான் எனது எதிரி. விஜய் எனது எதிரியில்லை என்றார். இஸ்லாமியர்களை எதிர்ப்பதை தவிர பாஜகவிற்கு வேறு கொள்கை இருக்கிறதா? பாஜகவிற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இட ஒதுக்கீடு என்று சொல்லகூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்றுதான் கூற வேண்டும்.
இஸ்லாமியருடைய ஓட்டுக்களை பொறுக்குவதற்காகவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் யாருடைய ஓட்டை பொறுக்குவதற்காக கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்? இஸ்லாமியர்கள் ஒருபோதும் எனக்கு வாக்களித்ததில்லை. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன் பிறந்தார்கள் என்ற எண்ணத்திலேயே அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன். அவர்களுடைய ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக, திமுகவுக்கு வாக்களிப்பதையே தீர்மானமாக வைத்திருக்கின்றனர். அவர்களது இறைத்தூதரே வந்து சொன்னால் கூட அவர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்துவதை விட மாட்டார்கள்.
ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம். தனித்து போட்டியிடுவோம். திமுக சார்பில் அங்கு இடைத்தேர்தலில் பணியாற்றக்கூடிய செந்தில் பாலாஜியை பார்த்து நாங்கள் பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா? பணம் கொடுத்தால் தான் திமுகவினர் தேர்தல் வேலைகளை செய்வார்கள். அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் அவரைப் பார்த்து பயப்பட வேண்டும்” என்றார்.