58 பேரை பலி கொண்ட குண்டு வெடிப்பு குற்றவாளி...‘அப்பாவின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’- சீமான் உருக்கம்
10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோவை வந்தார். உக்கடம் , அன்புநகரில் உள்ள பாஷாவின் வீட்டில் பாஷாவின் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், “கோவை சிறையில் நான் இருந்த போது பாஷாவுடன் மனம் விட்டு நான் பேசி இருக்கிறேன். அவரது மரணம் ஒரு பெரிய துயரம். இஸ்லாமிய கைதிகள் விடுதலை என பேசியவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின்பு கண்டு கொள்வதில்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது. அந்த சட்டப்பிரிவின்படிதான் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். கேரளாவிலும் 10 அல்லது 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள சட்டவிதியில் இஸ்லாமிய கைதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் இதற்கு பொருந்தாது என்ற விதிமுறையை வைத்துள்ளனர். இதனால் இவர்களை விடுவிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு போராட்டங்களை நடத்துவதை தவிர வழியில்லை. மீதி இருக்கும் சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். சட்டத்தின் படி இல்லாமல் மானுட பற்றின்படி விடுவிக்க வேண்டும்.
25 ஆண்டுகளை கடந்தும் இவர்களை சிறையில் வைத்து சித்ரவதை செய்வது சரியல்ல. பா.ஜனதாவிற்கு ஒரே கொள்கை இஸ்லாமியர்களை வெறுப்பது மட்டும்தான். கவர்னர் இவர்களது விடுதலைக்கு கையெழுத்திட மாட்டார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, இவர்களைவிடுதலை செய்து விட்டு பின்னர் பேசிக்கொள்ள வேண்டியதுதானே? .நியமன உறுப்பினருக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது என்றால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எதற்கு ?” எனக் கேள்வி எழுப்பினார்.