நான் அனுபவித்ததை தம்பி விஜய்யும் அனுபவிப்பார் - சீமான்
மறைந்த ராமச்சந்திரா ஆதித்தனாரின் 90-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அவரின் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அமைச்சர் அன்பரசன் நடிகர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று கூறுகிறார். கட்டமைப்பு இல்லாதவர்கள் குறித்து கவலை என்ன? அவர் விஜய் பற்றி தான் சொல்ல வேண்டும் என்று அவசியம் என இருக்கிறது உதயநிதி பற்றி கூட சொல்லி இருக்கலாம். அப்படி என்றால் என்ன சரத்குமார், குஷ்பு, நெப்போலியன் உள்ளிட்டவர்களை எல்லாம் ஏன் சேர்த்துக் கொண்டீர்கள்? அறிவாலயத்திற்கு வந்தால் தான் அறிவு வந்து விடுமா? திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க ஒருவர் கூட பிறக்கவில்லை என்று சொல்கிறீர்கள். பிறக்காத எதிரிகளை கண்டு ஏன் பயப்படுகிறார்கள்? அதிகாரத்தில் இல்லாத பொழுது பேசிய பேச்சை ஆட்சிக்கு வந்தபின் பேச முடியவில்லை. ஏனென்றால் சொன்னது எதையும் செய்யவில்லை,ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு கொள்கை கோட்பாட்டை பேசக்கூடாது அது அங்கேயே செத்துவிட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா பேசும் பொழுது கூட இறுதி காலங்களில் காசு கொடுத்துதான் கூட்டத்தை கூட்டினார்கள். எனக்கு விழுந்த 36 லட்சம் வாக்குகளில் குறைந்தது 25 லட்சம் வாக்குகள் திமுகவில் இருந்து தான் விழுந்துள்ளது. அப்பா திமுகவில் இருந்தால் பிள்ளைகள் என்னுடன் இருக்கிறார்கள். தமிழ் புதல்வன் திட்டம் என்றெல்லாம் சொல்லி இளைஞர்களை வாக்களிக்க ஒரு வருடத்திற்கு 18000 கோடி லஞ்சம் அளிக்கிறார்கள்... இதெல்லாம் ஒரு திட்டமா.? அரசு பள்ளி கல்லூரி அரசு பள்ளி கல்லூரி ஆக உள்ளதா 300 பேர் படிக்கும் பள்ளி கல்லூரிகளில் 2 கழிவறைகள் தான் உள்ளது.மேற்கூரை இல்லாத பள்ளிகள், மரம் நிழலில் படிக்கும் பள்ளிகள் உள்ளது. கார் ரேஸுக்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிறார்கள். காசு கொடுத்து கூட்டம் நீங்களே நம்பிக்கையாக இருக்கும்பொழுது தானா கூடும் கூட்டத்திற்கு நான் ஏன் அஞ்சவேண்டும். தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்கு ஒரு பெரிய அளவில் இடமில்லை, தமிழ்நாட்டில் பெரிய கூட்டம் கூடுவதற்கு இடமில்லை, தனியார் இடம் என்றால் உரிமையாளரை அழைத்து மிரட்டுவார்கள். அந்த நெருக்கடியை நானும் அனுபவித்தேன் தம்பியும் அனுபவிப்பார் வேறு வழி கிடையாது” என்றார்.