ஸ்டாலின், பழனிசாமி கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு இறந்தால் ரூ.10 கோடி நிவாரணம் தருகிறேன்- சீமான்
ஸ்டாலின், பழனிசாமி கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 கோடி நிவாரணம் தருகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றால், கொடநாடு கொள்ளை வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி பதவி விலகியிருக்க வேண்டும். நாட்டின் முதலமைச்சராக வாழ்ந்த இடம் கொடநாடு பங்களா. அங்கு ஒரு நொடி கூட மின்சாரம் துண்டிக்கப்படாது. ஏனெனில் அதற்கு தனி மின்மாற்றி உள்ளது. அப்படி இருக்கிற இடத்தில் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொல்லப்பட்டனர். கொன்றவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முதலமைச்சர் வாழ்ந்த இடத்திலேயே கொலை நடைபெற்று இருக்கிறது என்றால் எங்களுக்கெல்லாம் என்ன பாதுகாப்பு இருக்கிறது?
ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இரண்டுபேருமே ஒழிய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். முடிந்தால், ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் அந்த கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு போய் சேருங்கள். நாங்கள் நிம்மதியாக இருப்போம். நான் வேண்டுமென்றால் இருவரது குடும்பத்தினருக்கும் ரூ.10 கோடி நிவாரணமாக கொடுக்கிறேன். விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் ஏன்? விஷச்சாராயம் இறப்பு இல்லையென்றால் இன்று இத்தனை வழக்குகளை பதிவு செய்திருக்க மாட்டார்கள்.
திமுக சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுக சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும். 2 ஆண்டுகள் கடந்தும் கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 மாதங்களில் நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஆனால் இதுவரை எடுக்கவில்லை. பாலம், பள்ளிக்கூடம் ஆகியவை தரமற்ற முறையில் கட்டப்படுகிறது. ஆனால் பல கோடியில் பேனா கட்ட அரசு அவசர அவசரமாக முயற்சி செய்துவருகிறது” என்றார்.