நான் மன்னிப்பு கேட்கிறேனு சொன்னேனா? அந்த தொழிலதிபரை கூட்டிட்டு வா...சீமான் ஆவேசம்
தேவையற்ற ஒடுக்குமுறையாக எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் அளித்த நிலையில், சட்ட ஒழுங்கு பொதுமக்கள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து தடையை மீறி வந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் போராட்டத்தில் ஈடுபட முயலும் பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சூளை அருகே உள்ள கண்ணப்பன் திடல் சமுதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை செய்யப்பட்டார்
விடுதலை செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது. தேவையற்ற ஒடுக்குமுறையாக
எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன். இதே இடத்தில் பல்வேறு போராட்டத்தை நடத்தி இருக்கிறோம், ஆனால் இன்று மட்டும் கைது செய்யப்பட்டுள்ளேன். போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்றால் எங்களிடம் காவல்துறையினர் முறையாக தெரிவிப்பார்கள். நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம்
என்பது கூட தெரிய விடாமல் தடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது.தொடர்ந்து திருச்சி எஸ் பி வருண்குமார் விவகாரம் குறித்து பேசிய சீமான், மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலேயே கிடையாது. தவறு செய்தது வருண்குமார் தான். அவர் கூறும் தொழிலதிபரை அழைத்துக் கொண்டுவரட்டும். பத்திரிகையாளர்கள், காவல்துறை உயரதிகாரிகளை விட்டு வருண்குமார் தான் கெஞ்சினார். நான் எதற்கு அவரை சந்திக்க வேண்டுமென்று மறுத்துவிட்டேன் என கூறினார்.