“சம்மனை கொடுத்த பிறகு, அதை கிழிப்பதில் தவறில்லை”- சீமான் வழக்கறிஞர்

சம்மனை கொடுத்த பிறகு, அதை கிழிப்பதில் தவறில்லை என சீமான் வழக்கறிஞர் ரூபன் பேட்டியளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். மேலும் சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட போலீசாரின் சம்மனை கிழித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அமல்ராஜ் மற்றும் போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறி சீமான் வீட்டின் காவலாளியையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள சீமான் வழக்கறிஞர் ரூபன், “சம்மனை கொடுத்த பிறகு, அதை கிழிப்பதில் தவறில்லை. போலீஸ் சம்மனை கிழித்தவர் கார் ஓட்டுநர் சுபாகர். சீமான் வீட்டில் குண்டு வீசப்போவதாக கிடைத்த தகவலாலால் தான் காவலாளி துப்பாக்கியுடன் இருந்தார். காவல்துறையினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்களை காவலாளி தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவரை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றும்போதுதான் அவரது இடுப்பில் துப்பாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. சீமான் வீட்டு காவலாளி போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டினாரா? வீட்டின் பாதுகாவலர் என்ற முறையில் அவர் முன்னாள் ராணுவ வீரர், அவரிடம் துப்பாக்கிக்கான உரிமம் உள்ளது” என்றார்.