போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சீமான் வீட்டு காவலாளி கைது

 
a

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். மேலும் சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். போலீசார் கண்முன்னே சம்மனை கிழித்த சீமான் வீட்டு காவலாளி சுபாகர், விசாரணைக்கு வந்த போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி சுபாகர் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அமல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், சுபாகரின் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். எனினும், தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்ட விரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். நாதகவில் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக சீமான் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். 

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், நடிகை அளித்த பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.