பெரும் பரபரப்பு! சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மன் கிழிப்பு!

 
chennai

பாலியல் வழக்கில் ஆஜராகுமாறு சீமான் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மன் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சீமானின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த நீதிமன்றம்,  போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாரு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் இன்று ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர் ஆஜராகினார். 

இதனிடையே நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டு சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வளசரவாக்கம் போலீசார் சம்மன் ஒட்டிச் சென்றனர். அந்த சம்மனில் நாளை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சீமான் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை நாதக நிர்வாகி ஒருவர் கிழித்து எறிந்தார். சம்மனை கிழித்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.