மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சீமான்.. தமிழர் என்று எப்படிக் கூற முடியும்’ - ஆர்.எஸ்.பாரதி காட்டம்..
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “சீமான் தமிழ் நாட்டின் மக்களின் மத்தியில் ஏதோ குழப்பம் செய்ய வேண்டும் என்பதாக பேசி வருகிறார். தமிழ் தாய் வாழ்த்து என்பது திமுக ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர் கலைஞர் எழுதியது அல்ல; மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய கவிதை 50 ஆண்டு காலமாக இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடபட்டு வரப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையார் பாடிய தமிழ் தாய் வாழ்த்து சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்.
திருமாவளவன் திமுக முதல்வர்தான் இருக்க வேண்டும் எனக் கூறிய பிறகு அது குறித்தான கேள்வி எழவில்லை; தளபதி தான் முதல்வராக வர வேண்டும் என பலமுறை சொல்லி இருக்கிறார் திருமாவளவன். சீமான் வலை போட்டு இழுக்கலாம் என பார்க்கிறார். அந்த அபாய வழியில் திருமாவளவன் சிக்க மாட்டார். எங்களுக்கு தற்போது உள்ளவர் ஆளுநர் கிடையாது. ஆளுநரின் பதவி காலம் முடிந்துவிட்டது , அவருடைய மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான். எப்பொழுது செல்கிறார் என தேதி மட்டும் தான் அறிவிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இன்னொரு ஆளுமை பதவி ஏற்கும் வரை அவர் ஆளுநராக இருக்க வேண்டும் என்று இருக்கிறது.
உயர் நீதிமன்ற நீதிபதி என்றால் 62 வயது வரை இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி என்றால் 65 வயது வரை இருக்க வேண்டும், அரசியல் சாசனத்தில் லக்குணம் இருக்கிறது. கவர்னர் இல்லையென்றால் அந்த மாநிலத்தில் தலைமை நீதிபதி ஆளுநராக செயல்பட வேண்டும் என இருக்கிறது. கேசுவல் லேபர் போல் ஆளுநர் தற்போது செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.