முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள விஜய்க்குச் சீமான் வாழ்த்து!

 
1

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சியமைக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாடு எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாக களப்பணியாற்றுவோம்.

மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.