நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் அச்சுறுத்தல் - சீமான் ஆவேசம்!

 
Seeman

நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர் கதையாகிவிட்டது. அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ் மண்ணின் வளங்களைக் காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அச்சுறுத்தும் நோக்கத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு தனது கைப்பாவையான தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை  நடத்தியுள்ளது. 


மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் போக்கினைக் கண்டித்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும், மனிதநேய சனநாயக கட்சித் தலைவர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும், தமிழ்த்தேச தன்னுரிமை கட்சித் தலைவர் ஐயா அ.வியனரசு அவர்களுக்கும் எனது அன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.