விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு துணை போவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?? - சீமான் கண்டனம்..

 
விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு துணை போவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?? - சீமான் கண்டனம்..

‘விசாரணை கைதி விக்னேசின் மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா?’ என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “திருவல்லிக்கேணியில் கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால்தான் இறந்துபோனார் என்பது  உடற்கூறாய்வு பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டும், திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வாய்மூடிக்கிடப்பது பெரும் ஏமாற்றத்தையும், அறச்சீற்றத்தையும் தருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காவல்துறையினர் மூலம் நிகழும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதனை அதிகாரத்தின் துணைகொண்டு ஆளும் வர்க்கம் முழுமையாக மூடி மறைப்பதுமான போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.

விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு துணை போவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?? - சீமான் கண்டனம்..

   உடற்கூறாய்வு பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே, வலிப்பும், வாந்தியும் ஏற்பட்டுதான் விக்னேஷ் இறந்துபோனார் என எந்த அடிப்படையில் சட்டமன்றத்தில் கூறினார் முதல்வர் ஸ்டாலின்?  கொலைக்குக் காரணமானக் காவல்துறையினரைக் காப்பாற்ற வரிந்துகட்டுவது அற்பத்தனமான அரசியல் இல்லையா? சமூக நீதியென நாளும் பேசிவிட்டு, ஒரு எளிய மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்ற நினைப்பது சனநாயகத் துரோகமில்லையா? இதுதான் நீங்கள் தரும் விடியல் ஆட்சியா? பேரவலம்!

விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு துணை போவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?? - சீமான் கண்டனம்..

தம்பி விக்னேசின் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், லத்தியால் தாக்கியதற்கானக் காயங்கள் உள்ளதாகவும், தலை, கண், உடலில் இரத்தம் கட்டியதற்கான காயங்கள் உள்ளதாகவும், இடது கை, முதுகின் வலது பக்கத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதும், விக்னேசைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குகிற காணொளிச்சான்று வெளியாகியிருப்பதும் இது   பச்சைப்படுகொலை என்பதை முழுமையாகத் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

ஆகவே,   விக்னேசின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினரைக் கொலை வழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டுமெனவும், தம்பி விக்னேசின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத் தொகை வழங்க வேண்டுமெனவும்  நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.