எல்லோரையும் குடிக்க வைத்து பல தாய்மார்களின் தாலி அறுத்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?- சீமான்
எனக்கு ஓட்டு போட வேண்டாம், வேட்பாளருக்கும் ஓட்டு போட வேண்டாம். நல்லவன் யாரோ அவனுக்கு ஓட்டு போடுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆதரித்து இன்று கோச்சடை பகுதியில் இருக்கக்கூடிய முத்தையா கோவில் அருகே வேட்பாளர் விக்னேஸ்வரனை ஆதரித்து வாகனத்தில் நின்றுவாறு சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எனக்கு ஓட்டு போட வேண்டாம். வேட்பாளருக்கும் ஓட்டு போட வேண்டாம். நல்லவன் யாரோ அவனுக்கு ஓட்டு போடுங்கள். இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? 1000,2000, 8000கூப்பன் தருகிறேன் ஏமாற்று வேலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் கூட வாங்க முடியாத நிலையில் நம்மை வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனை. நம்மை நாம் பார்த்து கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.
குடிக்கும் நீரை கொடுக்க முடியாத வக்கற்ற அரசு. தவித்த வாய்க்கு தண்ணீரை விற்கும் திறனற்ற அரசு. எல்லோரையும் குடிக்க வைத்து பல தாய்மார்களின் தாலி அறுத்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? இத்தனை கோவில்கள்,இத்தனை சாமிகள், இத்தனை கடவுள்களை கும்பிடுகிறோம். எதற்காக திருடர்களிடம் நாட்டை ஒப்படைக்கவா? மலையையும் மண்ணையும் திருடுபவனுக்கா வாக்கு செலுத்த போகிறீர்கள்? செல்போன் புதுசு, கார் புதுசு, நகை புதுசு, டிவி புதுசு, பெண்ணுக்கு நல்ல பையன், பையனுக்கு நல்ல பொண்ணு, நல்ல சாப்பாடு, நல்ல ஹோட்டல் என எல்லாமே புதுசு, நல்லதா என கேட்கிறீர்கள். ஆனால் நாட்டை ஆள்பவனை மட்டும் தரித்திரம் பிடித்தவன் திருட்டு பயல், மோசமானவனிடம் கொடுக்கிறீர்கள். மக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். மண்ணின் மைந்தர்களை பார்த்து மகத்தான வாக்கை செலுத்துங்கள். பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை மாற்ற வந்துள்ள நாம் தமிழர் பிள்ளைகளுக்கு வாக்களியுங்கள்” என்றார்.



