வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்

வடபழனி விடுதியில் இருந்து வழக்கறிஞர்கள் குழுவுடன் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையல் வந்தடைந்தார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சீமானின் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாரு வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் நேற்று ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர் ஆஜராகினார். இதனையடுத்து இன்று ஆஜராக வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார் என போலீசார் நேற்று அவரது வீட்டில் சம்மன் ஒட்டினர்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். சீமானுடன் அவரது மனைவி கயல்விழி வருகைதருவார் என கூறப்பட்ட நிலையில், அவர் வரவில்லை. வழக்கறிஞர்கள் குழுவுடன், தொண்டர்கள் புடைசூழ சீமான் காவல்நிலையம் வந்தார். சீமானுடன், அவரது வழக்கறிஞர்களான நெல்லை சிவக்குமார், ரூபன், நிர்வாகிகள், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர். நள்ளிரவை தாண்டியும் விசாரணை நீளலாம் என்ற தகவலால் மனைவியை வர வேண்டாம் என சீமான் அறிவுறுத்தியதாக தெரிகிறது.