அனல் பறக்கும் இடைத்தேர்தல் களம் - சீமான், அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று பிரசாரம்

 
annamalai seeman annamalai seeman

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று மாலை சீமான், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Erode East

இந்நிலையில், இன்று மாலை சீமான், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 2 நாள் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். முதல் நாளான நேற்று மாலை பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மத்தியிலும், வீதிவீதியாகவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 2-வது நாளாக அண்ணாமலை பிரசாரத்தை தொடங்குகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே கடந்த 13, 14, 15 ஆகிய நாட்களில் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தனது 2-வது கட்ட பிரசாரத்தை சீமான் தொடங்குகிறார். இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மத்தியிலும் பேசினார். அதனைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்று மாலையும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.