சேடபட்டி முத்தையா மறைவு - ஓபிஎஸ் இரங்கல்!

 
ops

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் சேடப்பட்டி முத்தையா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்  1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார்.  

tn

அதிமுக சார்பில் நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதையடுத்து அதிமுகவிலிருந்து விலகி 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் சேடப்பட்டி முத்தையா  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில்  மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

tn

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டதிலிருந்து அதன் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும்; கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவரும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவராக ஐந்தாண்டு காலம் சிறப்புற பணியாற்றியவரும்; மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவரும்; அனைவராலும் “சேடப்பட்டியார்" என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான அன்புச் சகோதரர் திரு. சேடப்பட்டி ஆர். முத்தையா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

op

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்