நித்தியானந்தாவின் கைலாசா புகாருக்கு தலைமைச் செயலகம் மறுப்பு..!!

 
Q

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு சாமியார் நித்தியானந்தா எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அதாவது, கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் த.வெ.க. அமைச்சர்கள் லோகேஷ், ஸ்ரீநாத், வன்னி அரசு ஆகியோரை சந்தித்து ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின்போது, "சுவாமி நித்யானந்தா எழுதிய 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா', 'கைலாசாவின் வரலாறு' ஆகிய புத்தகங்களை அமைச்சர்களுக்கு பரிசாக அளித்தோம்.

இந்த புத்தகம் சனாதன தர்மத்தின் மீட்சிக்கும், அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு நிர்வாகிகள் சந்தித்த புகைப்படங்களையும் நித்யானந்தா பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, "நித்யானந்தா சொல்வதைப்போல எந்த அரசாங்க ரீதியான சந்திப்பும் நடைபெறவில்லை. மனு கொடுப்பதற்காக தினமும் அமைச்சர்களை நிறைய பேர் சந்திக்கிறார்கள். அதுபோல வந்தவர்கள்தான் புத்தகத்தை கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். மற்றபடி பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை. நித்யானந்தா பதிவில் கூறியிருப்பது தவறான தகவல்" என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்-க்கு நித்தியானந்தா வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தாவின் இந்த அதிகாரப்பூர்வ சந்திப்புப் புகாரைத் தலைமைச் செயலக அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.  

நித்தியானந்தா தனது X தளப் பதிவில், "கைலாசாவின் ஆன்மீகத் தூதர்கள், தமிழ்நாடு அரசின் தலை சிறந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான அதிகாரப்பூர்வ ராஜதந்திர ஈடுபாடுகளை மேற்கொண்டனர். இந்தச் சந்திப்புகளின் போது, கைலாசாவின் வரலாற்றுப் புத்தகம் மற்றும் காபி டேபிள் புத்தகம் ஆகியவை அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. 

சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி மற்றும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசும் இந்தப் புத்தகங்கள், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் ஆகியோரிடம் வழங்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்..

மேலும், அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன.  

தலைமைச் செயலகத்திற்கு வரும் எந்தவொரு பொதுமக்களும் மனுக்களை அளிப்பதற்காக அமைச்சர்களை நேரில் சந்திக்க முடியும். அப்படிச் சாதாரண மக்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, "ராஜதந்திர சந்திப்பு" என்பது போல தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு நித்தியானந்தாவின் புத்தகங்களுடன் சென்று, எப்படியாவது முக்கியத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பின்னர் அதனைப் தவறான முறையில் விளம்பரப்படுத்துவது கைலாசா பிரதிநிதிகளின் வழக்கமான நடைமுறைதான் என்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.