“திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள் உயிரோடு தானே இருக்கிறார்கள் என்ற சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”
திருப்பதியில் லட்டு சாப்பிட்டவர்கள் உயிரோடு தானே இருக்கிறார்கள் என்ற நாம் தமிழர் கட்சி சீமான் பேசியதற்கு பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திருப்பதி லட்டு குறித்து பேசி இருக்கிறார். உடனடியாக அவர் ஊடகத்தினர் மூலம் பக்தர்களிடம் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் நெய்யில் கலப்படம் செய்தது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கனவே செயல் அதிகாரி ஆய்வக அறிக்கையை வெளியிட்டு அரசுக்கும் சமர்பித்துள்ளார். பல கோடி பக்தர்களின் உணர்வுகள் புண்படும் விதமாக உள்ள இந்த செயல் மீது தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்தும், சனாதனம் குறித்தும் இந்து மக்களுக்கு எதிராக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.