'காசு இல்லாதவன் மேலே வரக்கூடாதா? என்ன காலி பண்ண பாக்குறாங்க’... சீல் வைத்தவுடன் கதறிய அப்பு பிரியாணி ஓனர்
திருவேற்காட்டில் உள்ள அப்பு பிரியாணி கடையின் சமையல் கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதியில் அப்பு பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. அப்பு பிரியாணி கடைக்கு சென்னை திருவேற்காடு, அயனம்பாக்கம் பகுதியில் உள்ள அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்தில் இருந்து பிரியாணி தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தக் கடையில் பிரியாணி மற்றும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், சமையலறை உள்ளிட்ட பகுதிகள் சுகாதாரமற்ற இருப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் இந்த கடை மீது கூறப்பட்டு வந்தது. அதேபோல் உணவு பாதுகாப்பு சான்று மற்றும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
முறையான அனுமதி,உரிமம் பெற்று செயல்படுத்த வேண்டும் என கடந்த 5 ஆம் மாதம் அப்பு பிரியாணி கடைக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் பிரியாணி கடையின் சமையல் கூடம் தொடர்ந்து செயல்பட்டு வந்ததோடு பல்வேறு புகார்களின் அடிப்படையில் இன்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் சந்திரபோஸ் தலைமையில் வந்த உணவு பாதுகாப்புத் துறையினர் கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் கடையின் சமையலறை இருப்பதும் ,தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடையை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் முயன்றனர். அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரியாணி செய்வதற்கு பயன்படும் டபராக்கள் உள்ளிட்ட சமையல் பாத்திரங்களை சாலை நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து போலீசாரின் பாதுகாப்புடன் அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவேற்காடு பகுதியில் உள்ள அப்பு கடை பிரியாணி உரிமையாளர் சாலையை மறித்து சாலையில் பிரியாணி டபராக்களை வைத்து போராட்டம் . பொதுமக்கள் பலரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சரியான நேரத்தில் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் அல்லல் பட்டு வருகின்றனர் #appukadaibiriyani #Ana #news pic.twitter.com/EZRX3t80X2
— ANA (@anglenewsagency) September 19, 2024
இச்சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கடையின் உரிமையாளர் அப்பு, “தள்ளுவண்டில கடை வெச்சவன் கடைசி வரைக்கும் தள்ளுவண்டியிலேயேதான் இருக்கணும், காசு இல்லாதவன் மேலே வரக்கூடாதா? கடைசி வரை பிச்சைதான் எடுக்கனும், சரக்குதான் அடிக்கணும், யாரையும் வளரவிட மாட்டாங்க... கார்லாம் வாங்கக்கூடாதுன்னு இதெல்லாம் பண்றாங்க. என்னை காலி பண்ண நினைக்கிறாங்க... சமையல் கூடங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறது” எனக் கூறினார்.