டிராக்டரின் பின்னால் மோதிய பள்ளி வேன்- 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது மழலைப் பள்ளி வேன் மோதியதில் நான்கு வயது குழந்தை மற்றும் ஒரு பெண் பலியாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கணபதி நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி முடிந்த பின்பு ஓட்டுநர் சந்துரு என்பவர் 9 மாணவர்களை பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு போகனபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் விடுவதற்க்காக சென்றுகொண்டிருந்தார். பள்ளி வாகனம் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வி.ஐ.பி நகர் என்ற பகுதியில் வரும் போது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற மணல் லோடு டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் டிராக்டரில் அமர்ந்து பயணம் செய்த விஜியா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 5 மாணவர்களில் ஹர்னிஷ் என்ற 4 வயது குழந்தை மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் சந்துரு ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது பள்ளி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் மற்றும் ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.