பள்ளி மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு : சக மாணவர்கள் 3 பேர் கைது..

 
பள்ளி மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு : சக மாணவர்கள் 3 பேர் கைது..


திருச்சியில் 10வகுப்பு மாணவன் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியும் பால சமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் தொட்டியும்  தோளூர்பட்டியை சேர்ந்த கோபி என்பவரது மகன் மவுலீஸ்வரனும் 10ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தபோது,   சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாக தெரிகிறது. அதில் கற்களை மவுலீஸ்வரன் தான் தூக்கி வீசியதாக நினைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மாணவர்கள்

இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில்  சக மாணவர்கள் 3 பேர்,  மவுலீஸ்வரனை  தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் நிலை தடுமாறிய மவுலீஸ்வரன் மரத்தில் முட்டி கீழே விழுந்திருக்கிறார்.   தலையில் பலத்த காயம் அடைந்த மாணவனை,  பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் இருந்த தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மவுலீஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த மாணவனின்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

கைது

சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவனை தாக்கிய 3 மாணவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின்,  குற்றச்சாட்டப்பட்ட  மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.   மேலும் இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  அதே நேரம் வேறு ஏதேனும் அசம்பாவித  சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் பள்ளி வளாகம் முன்பு  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்று 3 மாணவர்களையும் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..