மாதவிடாய் என்பதால் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு மாணவி தேர்வு எழுதிய விவகாரம்- பள்ளியின் முதல்வர் பணிநீக்கம்

கோவையில் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு மாணவி தேர்வு எழுதிய விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற 7-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் தேர்வு எழுதுவதற்கு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, மாதவிடாய் ‘தீட்டு’ எனக்கூறி அவரை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாக பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், கோவயில் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு மாணவி தேர்வு எழுதிய விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலவச கட்டாய கல்வி சட்டம் 2007 விதி 17ன் படி தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.