பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு உதயநிதி அட்வைஸ்

 
உதயநிதி ஸ்டாலின்

தொய்வாக செயல்படும் திட்டங்களை விரைந்து முடிக்க கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Image

கடலூர் மாவட்டம் கழுதூரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். 

இதில் காவல்துறை சார்பில் பல்வேறு வகையிலான துப்பாக்கிகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் 100 அடி உயரத்திற்கு தேசிய கொடி கம்பம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் வருவாய்த்துறை, வேளாண் துறை, மத்திய கூட்டுறவு வங்கி, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 909 பயனாளிகளுக்கு ரூ.15 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரத்து 397 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். 

Image

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வி துறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல் குறித்து ஆய்வு செய்து, மாணவர்கள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு வருவதை கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் மாணவ-மாணவிகளின் வருகை மற்றும் அவர்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. 

மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அவர்கள் வழங்குகின்ற மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைவாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்படும் முதல்வரின் முகவரி திட்டம், இ-சேவை, நான் முதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். கடலூர் மாவட்டம் அதிக கிராம பகுதிகளை கொண்ட மாவட்டம். இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  

Image

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் எந்த அளவில் செயல்பட்டு வருகிறது என அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறதோ?, அந்த துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பணிகளில் தொய்வு உள்ளது. அந்த பணிகளை எப்போது முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தொய்வு உள்ள பணிகள் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்ததும், முதலமைச்சர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். கடலூர் அருகே சத்துணவு கூடம் இடிந்து விழுந்ததும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் சரி செய்யப்படும். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கள ஆய்வு செய்து வருகிறார். தற்போது நடந்த ஆய்வு குறித்தும், முதலமைச்சருக்கு அறிக்கை அனுப்பப்படும்” என்றார்.