காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மே 31 ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

காலி மதுபான பாட்டில்களை வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த, சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 28 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று, ஒரு மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுபாட்டில்களுக்கு கியூ. ஆர். கோடு பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது என, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலிபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு பணியாளர்களின் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என்றும், தற்போது 29 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களில் அமல்படுத்த கடைசி வாய்ப்பாக மே மாத இறுதி வரை அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கபட்டது.
ஒரு மாத அவகாசம் வழங்கியும், மீதமுள்ள மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என, அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, பணியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். தினமும் 2 கோடி மது பாட்டில்களில் விற்கப்படுவதை சுட்டிக்காட்டி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மே 31ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அவ்வாறு அமல்படுத்தத் தவறினால், அதன்பின் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் வீதம் சுற்றுசூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்தனர். மேலும் காலி பாட்டில்களை சேகரிக்கும் போது, மூட்டை மூட்டையாக கட்டிப்போடுவதால், அவற்றில் சில உடைந்து சேதமாவதாக கூறிய நீதிபதிகள், காலி பாட்டிகளை முறையாக கையாளும்படி உரிய அறிவுறுத்தல்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

